tamilnadu

img

மக்கள் தொகை கணக்கெடுப்புடன் குடியுரிமை திருத்தச் சட்டமும் இணையப்போகும் பயங்கரம்

பிரகாஷ் காரத், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர், சிபிஐ(எம்) 

குடியுரிமைச் (திருத்த) சட்டம் 2019 மற்றும் தேசிய குடியுரிமைப் பதிவேடு ஆகிய இரண்டும் ஒன்றோடொன்று தொடர்புடையது மட்டுமின்றி அது ஒரு இரட்டை நடவடிக்கை. உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்திலும்  வெளியிலும் பலமுறை இது குறித்து தெளிவாகப் பேசியுள்ளார். முதலில் குடியுரிமை (திருத்த) மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும். அதைத் தொடர்ந்து தேசிய குடியுரிமைப் பதிவேடு நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறியிருக்கிறார்.

குடியுரிமைச் (திருத்த) சட்டத்தை எதிர்த்த போராட்டம் நாடு முழுவதும் எழுச்சி பெற்றுள்ள நிலையில் மத்திய அரசு, தேசிய குடியுரிமைப் பதிவேட்டை அமல்படுத்துவதில் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்த முயற்சிக்கிறது. தேசிய குடியுரிமைப் பதிவேட்டை அமல்படுத்துவதில் உள்ள தெளிவின்மை மற்றும் சரியான தகவல்கள் இன்மையையும் அரசு தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறது. “தேசிய அளவிலான தேசிய குடியுரிமை பதிவேடு குறித்து எவ்வித அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படவில்லை. எனவே இது குறித்து யாரும் அச்சப்படத் தேவையில்லை” என்று உள்துறை இணை அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி கூறியுள்ளார். “தேசிய குடியுரிமைப் பதிவேடு குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. ஒருவேளை பின்னர் அறிவிக்கப்படும் பட்சத்தில் எந்த ஒரு இந்தியக் குடிமகனுக்கும் எவ்வித இடையூறும் இல்லாத வகையில் விதிகள் வகுக்கப்படும்” என்று மத்திய அரசு இந்தியிலும் உருது மொழியிலும் விளம்பரம் செய்து வருகிறது.

தேசிய குடியுரிமைப் பதிவேடு (என்ஆர்சி) மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆர்)இணைப்பு 
 

இதுபோன்ற அறிவிப்புகள் அனைத்தும் தவறான தகவல்களின் அடிப்படையில் வெளியிடப்படும் நடவடிக்கைகளே.
 

ஒரு முக்கியமான விசயம் என்னவென்றால், தேசிய குடியுரிமைப் பதிவேடு என்பதன் செயல்திட்டம் தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பின் மூலம் துவங்கி விட்டது. இதுதான் தேசிய குடியுரிமைப் பதிவேட்டின் முதல் கட்ட நடவடிக்கை. தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் தயாரிப்பு மற்றும் புதுப்பித்தல் என்பதற்கான அறிவிப்பு 2019 ஜுலை 31 அன்று பதிவாளர் ஜெனரல் (குடியுரிமைப் பதிவு) அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு தனிநபர் குறித்த விபரங்களை வீடு வீடாக கணக்கெடுக்கும்பணி 2020 ஏப்ரல் 1 முதல் 2020 செப்டம்பர் 30 வரை மேற்கொள்ளப்படும் என்று அந்த அறிவிப்பு தெரிவிக்கிறது. தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் தொகுப்பு என்பது தேசிய குடியுரிமைப் பதிவேடு தயாரிப்பை நோக்கிய முதல்படி. இதுதான் ‘குடியுரிமை (குடிமக்கள் ஒழுங்குபடுத்தல் மற்றும் அடையாள அட்டை வழங்கல்) விதிகள் 2003ல் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகள் ஆகும். எனவே 2020 ஏப்ரல் 1ம் தேதியிலிருந்து வீடு வீடாக தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி துவங்க இருக்கிறது.

இதில் முக்கியமான அம்சம் என்னவென்றால், அதில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளின்படி (http: //censusindia.gov.in/2011.Act & rules/notifications/citizenship rules 2003 pol.8) கணக்கெடுப்பு மற்றும் சரிபார்த்தலின்போது ஒரு குறிப்பிட்ட நபரின் குடியுரிமைக்கான விபரங்கள் குறித்து சந்தேகம் ஏற்படும் பட்சத்தில் அது தனிப்பதிவேட்டில் விபரக் குறிப்புகளுடன் பதிவு செய்யப்பட்டு கூடுதல் விசாரணை மேற்கொள்ளப்படும். அதன்பின்பும் சந்தேகம் எழும் பட்சத்தில் அந்த விபரம் அந்த தனிநபருக்கோ அல்லது குடும்பத்திற்கோ அதற்கென வகுக்கப்பட்டுள்ள படிவத்தின் மூலம் தெரிவிக்கப்படும்.  மேலே குறிப்பிட்டுள்ள ஒரு குடிமகனின் பெயரை தேசிய குடியுரிமைப் பதிவேட்டில் சேர்ப்பது அல்லது நீக்குவது என்று முடிவெடுப்பதற்கு முன்பு வட்டார குடியுரிமைப் பதிவாளர் மூலம் ஒவ்வொரு தனிநபர் அல்லது குடும்பம் குறித்து விசாரிப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டு முடிவு எடுக்க வேண்டும் என்று விதி 4(5)(2) கூறுகிறது.

பயோமெட்ரிக் தரவு

இந்தக் கணக்கெடுப்பில் பிறப்பிடம், பிறந்த தேதி, தாய்,தந்தையர் பெயர் உட்பட பதினைந்து கேள்விகள் கேட்கப்பட இருக்கிறது. அப்படி சேகரிக்கப்பட்ட விபரங்கள் ஆதார் அட்டையில் குறிப்பிட்டுள்ள விபரங்களை வெளிப்படுத்துவதாக இருக்கவேண்டும். பின்னர் இந்த விபரங்கள் எல்லாம்  தனிநபரின் அடையாளம் குறித்த பயோமெட்ரிக் தரவுகளுடன் சரிபார்க்கும் வகையில் குறுக்குப் பரிசோதனை மேற்கொள்ளப்படும். எனவே தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புத் தொகுப்பு பயோ மெட்ரிக் குறித்த விபரங்களுடன் கூடிய வகையில் மேலும் பல சிக்கலான கேள்விகளை எழுப்பும். இப்படிச் சரிபார்க்கும் நிலையில் குடியுரிமைச் (திருத்த) சட்டப்படி குடியுரிமை பெற தகுதியுள்ள இந்துக்களைத் தவிர்த்த மற்ற ‘ஊடுருவல்காரர்களை’ வெளியேற்றும் நோக்குடன் உள்துறை அமைச்சர் அறிவித்துள்ளபடி வகுப்பு வாரியான தனிமனித விபரங்களை சேகரிக்கும் பணி நடைபெறும். அதே நேரத்தில் சந்தேகிக்கப்படும் தனிநபர்கள் தங்கள் குடியுரிமையை நிரூபிக்க ஆவணங்களை சமர்ப்பிக்கக் கோரும் துன்புறுத்தல்களுக்கு ஆளாக நேரும்.

தேசிய குடியுரிமை பதிவேட்டிற்கென்று தனிச்சட்டமோ அல்லது சட்டத் திருத்தமோ தேவையில்லை. அது ஏற்கனவே 2003ம் ஆண்டு வாஜ்பாய் அவர்கள் பிரதமராக இருந்தபோது குடியுரிமைச் சட்டம் 1955ல் கொண்டுவரப்பட்ட சட்டத் திருத்தத்தில் உள்ளது. முதல் முறையாக ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் தனது பெயரை பதிவு செய்து தேசிய அடையாள அட்டை வழங்குவதை கட்டாயமாக்கும் தேசிய குடியுரிமைப் பதிவேடு என்ற கருத்தாக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில் தேசிய குடிமக்கள் கணக்கெடுப்பில் விதிகள் வகுக்கப்பட்டுள்ளன.

தேசிய மக்கள்தொகை பதிவேட்டை புதுப்பித்தல் என்பது மக்கள்தொகை கணக்கெடுப்புடன் (census) 2021 சேர்ந்து மேற்கொள்வது என்பது மேலும் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. தேசிய மக்கள்தொகை பதிவேடு புதுப்பித்தல் (NRR) என்பதும், மக்கள் தொகை கணக்கெடுப்பு (census enumeration) என்பதும் வெவ்வேறானவை. ஆனால் இரண்டையும் ஒரே அதிகார அமைப்புகளே மேற்கொள்கின்றன. தேசிய மக்கள் தொகை பதிவேடு என்பது தேசிய குடியுரிமைப் பதிவேட்டோடு நேரடியாக தொடர்புடையது.  மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் மத,இன ரீதியான பிரிவினையை உருவாக்குவது என்பதே பாஜகவின் திட்டம் என்பது தெளிவாகிறது. ஒரு பக்கம் தேசிய குடியுரிமைப் பதிவேடு, வங்கதேசத்தில் இருந்து வந்துள்ள இஸ்லாமியர்களை வெளியேற்றி விடும் என்றும், மறுபக்கம் குடியுரிமைச் (திருத்த) சட்டம் எல்லைதாண்டி குடியேறியுள்ள இந்துக்களுக்கு குடியுரிமை வழங்குகிறது என்றும் சொல்லப்படுகிறது.

தேசிய குடியுரிமைப் பதிவேடு என்பது பெரும்பகுதி மக்களுக்கு ஆதார் அடையாள அட்டை வழங்கியுள்ள காலத்தில் மேற்கொள்ளப்படுகிறது. ஏற்கனவே தேர்தல் ஆணையம் மூலம் வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் குடியுரிமைப் பதிவேடு மற்றும் அடையாள அட்டை என்பது தேவையற்ற ஒன்றாகிறது. அதோடு பெரும் செலவினத்தையும் உண்டாக்கும். தேசிய குடியுரிமைப் பதிவேடு ஏழை எளிய மக்கள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் ஆதிவாசி மக்களுக்கு எதிராக பெரும் தாக்குதலாகும்.  குடியுரிமைச் (திருத்த) சட்டத்திற்கெதிரான இயக்கம் என்பது தேசிய குடியுரிமைப் பதிவேட்டிற்கும் எதிராகவும் சரியாக இணைக்கப்பட்டுள்ளது. குடியுரிமைச் (திருத்த) சட்டத்தையும் தேசிய குடியுரிமைப் பதிவேட்டையும் இணைத்தே பார்க்க வேண்டும். குடியுரிமைச் (திருத்த) சட்டம் இஸ்லாமியரல்லாத புலம்பெயர்ந்தவர்களுக்கு குடியுரிமை வழங்குகிறது. தேசிய குடியுரிமைப் பதிவேடு ‘இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள்’ என்று கூறி அவர்களை வெளியேற்றும் இலக்காக்குகிறது. நரேந்திரமோடி அரசின் நோக்கம் என்னவென்றால் உரிமைகள் பறிக்கப்பட்ட இரண்டாம்தர குடிமக்களை உருவாக்குவது என்பதே. 

மாநிலங்களின் தனித்துவம்

பாஜக மற்றும் மத்திய அரசின் இந்த பிரிவினை ரீதியிலான நிகழ்ச்சி நிரல் முறியடிக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமாகிறது. அதற்கு தேசிய குடியுரிமைப் பதிவேடு தடுக்கப்பட்டாக வேண்டும். அதற்கு மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் தேசிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு என்பது முதலில் நிறுத்தப்பட வேண்டும். பல்வேறு மாநில முதல்வர்கள் தேசிய குடியுரிமைப் பதிவேட்டை எதிர்த்துள்ளனர். நாடாளுமன்றத்தில் குடியுரிமைச் (திருத்த) சட்டத்தை ஆதரித்து வாக்களித்த கட்சிகளைச் சேர்ந்த பீகார் முதல்வர் நிதிஷ்மார், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ஆகியோர் கூட தேசிய குடியுரிமைப் பதிவேட்டை ஆதரிக்கவில்லை. 

கேரள முதல்வர் பினராயி விஜயன் , மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பை நிறுத்தி வைத்துள்ளனர். மாநில அரசுகள் தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பிற்கு அதன் அலுவலர்களை அனுப்ப வேண்டியுள்ள நிலையில் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு தடைபட்டுள்ளது. மற்ற மாநில அரசுகளும் இதே வழியை மேற்கொள்ள வேண்டும். மத்திய அரசு, தேசிய குடியுரிமைப் பதிவேடு பணி துவங்கப்படவில்லை என்று கூறுவதில் உறுதியாக இருக்கும் பட்சத்தில் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கான 2019 ஜுலை 31 தேதிய அதன் அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும். 

நன்றி : இந்து (ஆங்கிலம்) 23-12-2019

தமிழில் : வழக்கறிஞர் பெ. ரவீந்திரன், த.மு.எ.க.ச. மாநிலக்குழு உறுப்பினர். 


 

;